என்ன குற்றம் செய்தோம்..?. தெரியவில்லை.
செய்த குற்றத்திற்கு சாட்சிகள் உண்டா..? இல்லை.
யார் எங்களைச் சிறையில்லிட்டார்..? தெரியவில்லை.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் பாதுகாப்பு என்ற சிறைக்குள்ளேயே ஆயுள் தண்டனை கைதிகளாய் வாழ்கிறோம். வெளியுலகு என்ற ஒன்றை நாங்கள் எங்கள் வாழ்நாளில் கண்டதில்லை. அதற்கான அனுமதியும் எங்களுக்குத் தரப்படவில்லை.
இங்கே சிறைக்குள் கத்திப் பேசக்கூடாது, சத்தமாக சிரிக்கக்கூடாது, எதற்கும் ஆசைப்படக்கூடாது, நாம் விரும்பும் ஆடைகள் அணியாது கொடுக்கப் ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும் என்று எங்களுக்கு பலதரப்பட்ட விதிகள். இவற்றை பின்பற்றாதவர்கள் கண்காணா இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டனர். சிலரது சடலங்கள் திரும்பின. பலரது அங்கேயே புதைக்கப்பட்டன.தங்கள் உயிருக்கு பயந்தே பலர் இங்கு விதிகளை மீறுவது கிடையாது.
இங்கே எங்களுக்கு பெரிதாய் வேலைகளொன்றும் கிடையாது. ஒரு சில வேலைகளையே நாங்கள் தினமும் திரும்பத்திரும்ப செய்கிறோம்.
விடிந்தவுடன் எங்களில் சிலர் சமைக்கிறோம்.
மற்றவர்கள் சமைக்கக் கற்றுக்கொடுக்கப்படுகிறோம்.
அதன்பின் பாத்திரங்கள் கழுவுகிறோம்.
அதைத் தொடர்ந்து சிறைக்கு வெளியிலிருந்து வந்த துணிகளை துவைத்து மீண்டும் வெளியே அனுப்புகிறோம்.
நாங்கள் துவைத்த துணிகள் ஒன்றுகூட நாங்கள் உடுப்பவை கிடையாது.யாருடையது இவையெல்லாம் என்று கேள்வி கேட்கும் அளவிற்கு இங்கு யாருக்கும் தைரியமும் கிடையாது.
சிறைவாசிகள் எங்களுக்கு பண்டிகை நாட்கள் உண்டு. யாரோ, எங்கிருந்தோ அனுப்பிய பரிசுகள் கண்டே அன்று பண்டிகை நாள் என்று அறிந்து கொள்வோம். புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் என்று பலவித பரிசுகள். புத்தகங்கள் மட்டும் கிடையாது. அதுவும் ஒரு குழுவினருக்கு, எங்களுக்கு பரிசுகள் வருகின்ற நாளன்று பரிசுகள் வாராது குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பரிசுகள் வருவதைக் கண்டிருக்கிறோம். அதை வைத்தே நாங்கள் எங்களுக்குள் மதப் பிரிவுகளை அறிந்துகொண்டோம்.

குழந்தையாய் இருக்கையில் சிறையில் அடைக்கப்பட்ட நாங்கள், பருவமடைந்த பின் இன்னும் கடுமையான சிறைக்கு மாற்றப்படுவோம். அதன்பின் திருமணம் முடிந்தவுடன் வெளியே வேறு சிறைக்கு மாற்றப்பட்டோம். சிறை மாற்றப்படுவதில் இங்கு ஓர் விதியுண்டு. திருமணமாகி வேறு சிறைக்கு சென்றவர்கள் மீண்டும் தாங்கள் முன்பிருந்த சிறைக்கு வர அனுமதி கிடையாது.
இந்த கொடுமைகள் நிறைந்த சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க வழிகளே இல்லையா…?
எங்களில் பலருக்கு அந்த எண்ணங்கள் வந்ததுண்டு. சிலர் தப்பிக்க முயற்சியும் செய்துள்ளனர். ஆனால் அவ்வாறு முயற்சி செய்து பிடிபட்டவர்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அதைத் தாண்டித் தப்பித்தவர்கள் கொடுமையாகக் கற்பழிக்கப்பட்டனர் என்று கதைகள் சொல்லப்பட்டன. அதனாலேயே இங்கு பெரும்பாலனோர் தப்பிப்பது பற்றி யோசிப்பது கிடையாது.

நான் எப்படி பிறந்தேன் என்று என் கேள்விக்கு, திருமணமான இரவே தான் ஒரு இருட்டு அறைக்குள் தள்ளப்பட்டதாகவும், அங்கே இரு கைகள் தன்மீது படர்ந்ததாகவும், அதன்பின் ஏதோவொன்று தன் துவாரங்களுக்குள் சென்று வந்ததாகவும், அதன்பின் வயிறு வீங்கி, பத்து மாதங்கள் கழித்து நான் பிறந்ததாகவும் என் அம்மா கூறுவாள். பிற பெண்களுக்கு கிடைக்காத ஒன்று என் அம்மாவிற்கு கிடைத்துள்ளது. அவள் திருமணமான மறுநாளே அவள் எந்த சிறையிலிருந்து வந்தாளோ, அங்கேயே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டாள்.
வருடம் முழுக்க காத்திருந்ததெல்லாம் இந்த ஓரே ஓர் நாளுக்காகத்தான். ஆம் மாதவம் செய்து பிறந்து, இந்த உலகிற்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்து, எங்கள் வாழ்நாள் இறுதிவரை அடிமையாகவே வாழ்ந்து மடிவதற்கு இந்த உலகம் எங்களைக் கொண்டாடும் நாள். அது ஒருநாள் கூத்து என்றாலும்கூட அந்த நாளுக்காகத்தான் எதிர்பார்த்து நிற்கிறோம்.
ஆஹா..! இந்த வருடமும் அந்த நாள் வந்துவிட்டது.
ஆம்.இன்றுதான் அந்த நாள். இன்று மட்டும் இந்த உலகமே எங்களை கொண்டாடித் தீர்க்கப் போகிறது. அதை எண்ணி என் மனம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கிறது. அய்யோ…ஒரு நிமிடம் இருங்கள்.வாழ்த்து சொல்ல மறந்துவிட்டேன்.

என்னைப்போலவே உலகம் முழுக்க இருக்கும் அடிமைகளுக்கு, இந்த அடிமையின் ‘இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்‘.