நான் பிறந்தது பிழையா
இல்லை என் பிறப்பே பிழையா…?
நான் பிறந்தபோது என் குறி பார்த்தோ என்னுடைய குழி பார்த்தோ நான் அவன் என்றோ அவள் என்றோ முடிவு செய்தது யார் பிழை..?
நீங்கள் தானே ஒன்றுகூடி என்னைப் பெற்றீர்கள்.
சிலையொன்றை செதுக்கையிலே சிற்பிகள் நீங்கள் செய்த தவறுக்கு சிலை நான் என்ன செய்வேன்…?
இருளில் ஒன்றுகூடி செதுக்கியதலோ என்னவோ இந்த தவறு நேர்த்திருக்கக் கூடும்.
ஆணாகத்தான் பிறந்தேன்..
ஆணாகத்தான் வளர்ந்தேன்.
அவ்வப்போது மட்டும் உங்கள் ஆசைக்காக எனக்கு கொலுசிட்டு என்னைப் பெண்ணாக்கி அழகு பார்த்தீர்கள்.
நீங்கள் ஆசைக்காக செய்த ஒப்பனைகளை நான் ஆசைப்பட்டு செய்த போது நீ பெண்ணா என்று கேட்டீர்கள்.
கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள் இருந்த அவள் வெளிவர துடிக்கையில் வெட்கமும் அச்சமும் என்னை இருள் போல் சூழ்ந்து கொண்டன.
எவரிடம் சொல்வது எனத் தெரியவில்லை.
யாரிடம் கேட்பது எனப் புரியவில்லை.
எனக்குள் இருந்த அவளும் உறங்கவில்லை
.
அவனாய் இருந்த நான் அவளாய் மாறத் தொடங்கினேன்.
புருவத்திருத்தி கண்மசி வாங்கி வந்து என்னை நான் அலங்காரித்த போதே புரிந்து கொண்டேன் நான் அவன் இல்லை அவள் என்று.
சிலர் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டு
ஆனால் என் வாழ்க்கையை மாற்றிடும் மாற்றம் அது எனக்குள்ளேயே.
அன்றொரு ஒரு நாள் குட்டு வெளிப்பட்டது.
அன்று என்னை நேசித்தவர்கள் இன்று என்னை வெறுப்பவர்களாக.
என் தாய் என்னை மறுத்தார்.
என் தந்தை என்னை வெறுத்தார்.
வீட்டிலிருந்து வெளியே வீசப்படும் குப்பையாக தெருவில் வீசப்பட்டேன்.
இயக்குநீர் தந்த இறைவன் இயல்பைவிட அதிகமாக எனக்களித்தது நான் பெற்ற சாபமா??
பெண்ணாக பிறப்பது மாபெரும் தவம் என்றால்
பெண்ணாக மாறுவது மட்டும் மாபெரும் குற்றமா?
பசிக்கும்போது புசிக்க எனக்கு உணவில்லை
அதனால் பலர் பசிக்கு புசிக்க நானே உணவானேன்.
என் முலைகளை பிசைந்திடும் கைகளை ஒடித்து எனைத் துளைக்க துடிக்கும் குறி அறுக்க என் ஆழ்மனம் துடித்தது.
பாவம் என் வயிற்றின் பசித் துடிப்பின் முன் என் ஆழ்மனத்துடிப்பு ஒவ்வொரு முறையும் தோற்று போனது.
அதுவும் இல்லாமல்
இதுவும் இல்லாமல்
எதுவும் அல்லாமல்
நடுகாட்டில் தனிமரமாய் நான் இங்கே.
முழுதாய் மாற முற்படும் போதெல்லாம் தாயம்மா தாங்காமல் உயிர் விட்ட உடல்களே கண்முன் தோன்றின.
நவீன முறையால் வேண்டாமென்று நான் வெறுத்ததை வெட்டி அகற்றிய இடத்தில் உணர்வில்லை.
ஆனாலும் முழுதாய் பெண்ணாய் பிறந்ததுபோல் வலியிலும் மகிழ்ச்சியில் மனதிற்குள் ஆர்ப்பரிக்கிறேன்.
இரவுகளாய் தொடர்ந்த என் நாட்களில் முதன்முதலாய் பகலைக் காண்கிறேன்.
பெண்ணாடை உடுத்தி நடக்க நடுங்கிய வீதிகளில் இன்று பெண்ணாய் நடக்கிறேன்.
எப்படி மாறினீர்கள் என்று என்னைப் பார்த்து கேட்கையில் குறி அறுத்து குழி போட்ட கதையினை நான் எப்படி சொல்வேன்.
உங்களுக்கு மார்பகங்கள் உண்டா..?
உங்களுக்கு பெண்குறி இருக்கிறதா..?
என்று மனம் துளைத்திடும் கேள்விகள் பல.
எல்லாவற்றிற்கும் சிறு புன்னகையே என் பதிலாக.
என் வழி செல்ல ஒரு நாளும் தயங்காத நான் இந்த பக்கமா அந்த பக்கமா என்று கழிப்பறை முன்பு தயங்கி நிற்கிறேன்.
கேலிக் கேள்விகள் பலவற்றை செவி ஏற்றாது கடக்கும் நான் என் பாலினம் கேட்கும் விண்ணப்ப படிவக் கேள்வி முன் விடையின்றி நிற்கிறேன்.
அலி,உஸ்,ஒன்பது என்று ஏளனம் செய்யும் நண்பர்களே
சில சமயங்களில் எனக்கு புரிவதில்லை
எங்குள்ளது பிழை?
எங்கள் உடலிலா..?
உங்கள் மனதிலா..?
முப்பால் உருக்கொண்ட உயிரற்ற சிலையை கடவுளென வணங்கும் நீங்கள் தான் உயிருள்ள முப்பால் எங்களை சாபமென சபிக்கிறீர்கள்.
அர்ச்சனை தட்டில் காசிட்டு கல்லிடம் கருணை வேண்டும் நீங்கள் தான் தேடி வந்து ஆசிர்வத்திக்கும் எங்களை கருணையின்றி வெறுக்கிறீர்கள்.
அந்த நாட்களிலும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டி போராடும் பெண்களே…
எங்களுக்கு எந்த நாட்களிலும் கோவிலுக்குள் அனுமதியில்லையே நாங்கள் எங்கு சென்று போராடுவது..?
உங்களுக்கு சாதரணமானவைகள் எங்களுக்கு எப்பொழுதும் சவால்களே.
அதிகாரம் கேட்டு போரிடுபவர்கள் மத்தியில் அங்கீகாரம் கேட்டு நாங்கள் போரிடவது குற்றமா..?
நாங்கள் என்று வருகையில் மட்டும் காவல்துறை ஏவல் துறையாக மாறுவது நியாயமா?
சாபம் சுமக்கும் என்னுடல் சுமக்கும் உதிரம் கூட சாபம் சுமக்கும்
இரத்த தானம் செய்து வந்தேன்..
என் இரத்தம் பெறும் நண்பனே பதறவேண்டாம்
என் இரத்தம் உன்னை என்னைப்போல் மாற்றிவிடாது.
சாபம் சுமந்தாலும் நாங்கள் என்றும் எங்களுடன் சாதிகளை சுமப்பதில்லை.
ஓரினம் சேர்பவர்களும் நாங்களும் ஒன்றென்று ஓயாமல் ஓதும் மாக்களே…
இன்றேனும் புரிந்துகொள்ளுங்கள் அவர்கள் வேறு நாங்கள் வேறென்று.
காலம் தந்த காயமெல்லாம் காதலாலே மறைந்து போகும்.
ஆம் எங்கள் வாழ்விலும் காதல் உண்டு..காமம் உண்டு.
தாயிருந்தும் அநாதையாய் நான் அன்று.
அநாதைக்கு தாயாய் நான் இன்று.
பெற்றால் தான் பிள்ளையா?
மனிதனாய் பிறந்ததினால் மனம் கொண்டோம்.
இயக்குநீர் இயல்பினால் மாறிடும் குணம் கொண்டோம்.
பணம் கொடுத்து எம்மை ஒதுக்கிடும் கரம் வேண்டாம்.
உங்களில் ஒருவராய் எம்மை ஏற்கும் மனமே வேண்டும்.
என் உடன்பிறவா திருநம்பி,திருநங்கை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இவ்வரிகள் சமர்ப்பணம்
Hats off….vry well written…!!
LikeLike