கறை
கறை கண்டால் குறையா.
இல்லை கறை நேர்ந்தால் பிழையா..??
குருதி குடித்த கொசுவொன்று எங்கள் தொடையில் அமர்ந்து கடித்துவிடக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்…
அவசரத்தில் அதை அடித்துவிட்டால்…
அய்யய்யோ கறை ஆகிவிடுமே…
எழுதும்பொழுது சிவப்பு பேனா மையோ,உண்ணும் போது தக்காளி பழச்சாறோ எங்கள் மீது தவறிக் கூட சிந்திவிடக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்…
அதுவும் உங்கள் கண்களுக்கு எங்களின் இரத்தமாக தெரியுமே..!!
மனித குலம் தழைக்க இங்கே என்னைப் போன்ற எத்தனை ஆயிரம் பெண்கள் வலியோடும் கண்ணீர் நிறைந்த விழியோடும் தினம் தினம் இரத்தம் சிந்துகின்றனர் தெரியுமா..?
அன்று சுதந்திர போராட்டத்தில் பலர் தங்கள் இரத்தம் சிந்தி சுதந்திரம் பெற்றனர்…
ஆனால் மாதமாதம் இரத்தம் சிந்தியும் எங்களால் இன்றும் சுதந்திரம் பெற முடியவில்லையே ஏன்??
அந்த நாட்கள் தரும் வலியை விட
அந்த நாட்களில் எங்களுக்கு விதிக்கப்படும் விதிகள் தரும் வலிகளே அதிகம்.
கோவிலுக்கு செல்லக்கூடாது
சமையலறைக்குள் நுழையக் கூடாது
பிறருடன் ஒன்றாய் அமர்ந்து உண்ணக் கூடாது…
அம்மா எத்தனை எத்தனை விதிகள்..
தான் பெற்ற பிள்ளையையே அநாதை பிள்ளை போல் வீட்டைவிட்டே ஒதுக்கி வைத்து விட்டு விலகி நிற்கும் பழமைவாத பித்தர்களே…
அந்த நாட்களில் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று எங்களுக்கு அனுமதி மறுக்கும் மூடநம்பிக்கை மூடர்களே..
உங்களுக்குத் தெரியாதா…??
நீங்கள் அர்ச்சனை செய்து ஆராத்தி எடுக்கும் பெண் தெய்வங்கள் கூட இப்படிப்பட்ட நாட்களை கடந்து வந்தவர்கள் தான் என்று.
அந்த நாட்களில் நாங்கள் அசுத்தம் என்று எங்களை விலக்கி வைக்கும் புத்தி கெட்ட அறிவாளிகளே..
புரிந்து கொள்ளுங்கள்
கறை எங்கள் புறத்திலா
உங்கள் அகத்திலா என்று..!!
நாம் வாழ பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் எந்த பாடப் புத்தகமும் நமக்கு வாழ்க்கைப்பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை.
பெண்ணிற்குள் இந்த சுழற்சி உண்டு என்று சொல்லிக்கொடுக்கும் எந்த பாடப் புத்தகமும் அவள் சந்திக்கும் வலியையோ ஒரு ஆணாய் இருந்து பெண்ணுக்கு உதவிடும் வழியையோ சொல்லிக்கொடுக்க மறக்கின்றன…மறுக்கின்றன.
பேருந்தில் கடைசி இருக்கையில் அமர்வதற்காக நாங்கள் போடும் சண்டைக்கான காரணமோ பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இடைவெளி நேரம் முடிந்து வந்த பின்னரும் வகுப்பு நேரங்களிலும் ஆசிரியரிடம் இடைவெளி கேட்டு அவசரமாய் நாங்கள் வெளியே செல்லும் காரணமோ உங்களுக்கு புரியாமல் இருப்பது ஏன்?
வயதானவர்களுக்கு பேருந்தில் எழுந்து இடம் அளிக்க சொல்லும் உங்கள் மனது இரத்தம் சிந்தும் ஒரு பெண்ணிற்காக எழச்சொல்லாமல் இருப்பது ஏன்??
உங்களை குறை சொல்லி என்ன செய்ய…??
நீங்கள் வளர்ந்த சமுதாயம் அப்படி.
அப்படிப்பட்ட சமுதாயத்தில் அணையாடை வாங்குவதில் கூட எத்தனை தயங்கங்கள்…?? எத்தனை தடங்கல்கள்..??
பெண்ணிற்கு மாதம் வரும் சிரமத்தை சிரமமின்றி போகச் செய்யும் ஒரு பொருளை எத்தனை பெருமையாக வாங்கி செல்ல வேண்டும்
ஆனால் நாமோ அதைக் காகிதத்தில் சுருட்டி கருப்பு பையிலிட்டு எதையோ தொடக்கூடாத ஒன்றை வாங்கி வருவது போலல்லவா வாங்கி வருகிறோம்..
இது எத்தனை அசிங்கம்??
சுவை சொல்லி வாங்கப்படும் ஆணுறைக்கு இருக்கும் சுதந்திரம் கூட இங்கு பெண்ணின் சுமைதாங்கும் அணையாடைக்கு இல்லையே…
நல்ல அணையாடை அணிய விரும்பி நகரத்து கிழவன் ஒருவனுக்கு மூன்றாம் தாரமாய் கழுத்து நீீட்டிய கிராமத்து குமரிகள் கதை இங்கே பலவுண்டு.
பலசுவை கொண்டதாலோ என்னவோ இங்கு ஆணுறைக்கு வரிவிலக்கு…. சுமைதாங்குவதாலோ என்னவோ இங்கு அணையாடைக்கு உயர்த்தப்பட்ட வரிவிதிப்பு.
வாங்கத்தான் பணமில்லை வறியவளுக்கு…
மறைக்கத்தான் எடுத்துப் பூசிக்கொள்கிறாள் கரிச்சாம்பலெடுத்து….
மற்ற கறைகளை கறை நல்லது என்று போற்றிடும் சீழ்புடித்த சமுதாயமே
இக்கறையை மட்டும் குறையென்று கூறுவது ஏன்??
எங்குள்ளது குறை??
ஒரு பெண் காயமுற்று கோப்பட்டால் கூட
“விட்றா அவ அந்த நாள்ல இருக்கா போல!”என்று சொல்லி விட்டு கடந்து செல்லும் மாமனிதர்களே
இங்கே ஒவ்வொரு பெண்ணிற்கும் வலியுண்டு
அது மாதம் வருபவை அல்ல
மனிதர் தருபவை.
என் அன்புத் தோழி விபிஷிணிக்கு இவ்வரிகள் சமர்ப்பணம்.